கேரள மாநிலம், தேக்கடி அருகே ஆனவச்சால் புல்தகிடி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான வாகன நிறுத்தும் இடம் அமைப் பது தொடர்பாக விரைவில் பொது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று கேரள முதல்வர் உமன் சாண்டி தெரிவித்தார்.
தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வாகன இரைச் சல், ஒலி எழுப்பான்களால் வன விலங்குகள் அச்சம் அடை கின்றன.
எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், வன விலங்குகளுக்கு அமைதியான வனச் சூழலை உறுதிப்படுத்தும் வகையிலும், தேக்கடி அருகே யுள்ள ஆனவச்சால் புல்தகிடி என்ற இடத்தில் வாகன நிறுத்தும் இடம் அமைக்க கேரள வனத் துறையினர் முடிவு செய்து மண் கொட்டி வந்தனர்.
ஆனால், வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்த பகுதி முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறி, அந்த முடிவுக்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப் புத் தெரிவித்தனர்.
அந்தப் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறிய கேரள வனத் துறையின் வாதத்தை தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆதாரத்துடன் மறுத்து, அந்த ஆதாரத்தை கேரள தலைமைச் செயலருக்கும் அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, தமிழக விவ சாயிகளுக்கு ஆதரவாக குமுளியில் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து, கடந்த ஒரு மாதமாக வாகன நிறுத்தும் இடம் அமைக்கும் பணியை கேரள வனத் துறை நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருள் களைப் பிரித்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டம் மற்றும் தேவையில்லா குப்பைகளை எரிக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை குமுளியில் கேரள முதல்வர் உமன் சாண்டி தொடக்கிவைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் விரைவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய பின்னர், ஆலோ சனை நடத்தி அடுத்த கட்ட நட வடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கருத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றார்.