சென்னை: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காவல் துறையினரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சியிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் சில தினங்கள் முன் கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக, பெலிக்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெலிக்ஸ் ஜெரால்டு கடந்தவாரமே கைது செய்யப்பட்டுவிட்டார். எனவே அவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி “பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுவிட்டதால் அவரின் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது” என்று கூறி பெலிக்ஸ் ஜெரால்டின் மனுவை தள்ளுபடி செய்தார்.
முதல்வர் தனிப்பிரிவில் புகார்...: இதற்கிடையே, பெலிக்ஸ் ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜோன் தலைமைச்செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில், "சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த எனது கணவர் ஜெரால்டு நெறியாளர் என்பதற்காக வழக்குகளில் உடன் வழக்காளியாக சேர்க்கப்படுகிறார். அந்த பேட்டியை அவர் உள்நோக்கத்துடன் பதிவு செய்யவில்லை. இந்த நேர்காணலை பதிவு செய்ததற்காக கடந்த மே.15ம் தேதி நான் வருத்தம் தெரிவித்துள்ளேன். அந்த காட்சியும் நீ்க்கப்பட்டுவிட்டது. கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது.
கடந்த மே 14-ம் தேதி நடத்தப்பட் ட சோதனையில், வழக்குடன் தொடர்பில்லாத எங்கள் சொத்து ஆவணங்கள், புகைப்படக்கருவிகள், கணிப்பொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், எங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பெலிக்ஸ் ஜெரால்டு மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற்று, அவர் சிறையில் இருந்து விடுதலை பெற வழிவகை செய்ய வேண்டும்.” என்று பெலிக்ஸ் மனைவி ஜோன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, வழக்கறிஞர் ஜான்சன் கூறும்போது ,‘‘ பெலிக்ஸ் கைது விவகாரத்தில் சட்டப்படியான தவறுகள் நடைபெற்றுள்ளது. சோதனையில் வழக்குகளுடன் தொடர்புடையவற்றை கைப்பற்றாமல், புகைப்படகருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு பெலிக்ஸ் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் ’ ’என்று கூறினார்.