வேளச்சேரி வீனஸ் காலனியில் 2 அடுக்கு வீடு சாய்ந்து நிற்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வேளச்சேரி வீனஸ் காலனி நான்காவது தெருவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட 2 அடுக்கு வீடு ஒன்று, தற் போது இடதுபுறமாக சற்று சாய்ந்து நிற்கிறது. இதனால், அதன் உரிமை யாளரும் குடியிருந்தவர்களும் வீட்டை காலி செய்துவிட்டனர். தற் போது அந்த வீட்டை இயந்திரங்கள் மூலம் தூக்கி நிறுத்திவிட்டு, கட்டிடத் தின் அஸ்திவாரத்தை மீண்டும் முறையாக அமைத்து வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒருவர் கூறும்போது, “நாங்கள் குடி வந்தபோது வீடு சரியாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது சாய்ந்து நிற்கிறது. கடந்த ஒரு மாதமாக வீட்டுக்குள்ளேயும் இந்த சரிவை உணர முடிந்தது. அதனால் வீட்டை காலி செய்துவிட்டோம்” என்றார்.
வேளச்சேரி, தரமணி, பெருங்குடி பகுதிகளில் முன்பு ஏரியாக இருந்த இடங்களிலும் தற்போது இருக்கும் ஏரிக்கு மிக அருகிலும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இப்போதும் பல புதிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
வேளச்சேரியில் வசிக்கும் சம்பத் என்பவர் கூறும்போது, “கடந்த பத்தாண்டுகளில் இங்கு பல புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. வீடுகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஏரி பகுதிகளில் கட்டப்படுவதால் சாய்ந்து நிற்கும் வீடுகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இங்கு இருப்பது களி மண் என்பதால், வீடுகளின் ஸ்திர தன்மைக்கு எப்போதும் ஆபத்துதான்” என்றார்.
சரி செய்து தரும் பணியை டி.டி.பி.டி. என்ற நிறுவனம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் குர்தீப் சிங் கூறும்போது, “வேளச்சேரி, தரமணி பகுதிகள் ஏரிகள் இருந்த இடம் என்பதால், அங்கு பல வீடுகளை உயர்த்தித் தருமாறும், சாய்ந்து நிற்கும் வீடுகளை சரி செய்து தருமாறும் எங்களிடம் கேட்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 20 வீடுகளை வேளச்சேரியில் சரி செய்துள் ளோம். வீடுகளின் அடித்தளத்தை வலுவாக கட்டாததே இதற்குக் காரணம்” என்றார்.
வீடுகள் ஒரு பக்கமாக சாய்ந்து வருவதைக் காணும் அப்பகுதி மக் கள், அண்மையில் மவுலிவாக்கத் தில் நடந்ததுபோல் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.