பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

காப்பீடு திட்டம்: அரசு மருத்துவமனைகளில் துறை தலைவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுமா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு விரைவாக சி்கிச்சை கிடைக்கவும், காப்பீடு மூலம் கிடைக்கும் நிதியில் மருந்து, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய, துறைத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏழை நோயாளிகள், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கட்டணமின்றி அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய சிகிச்சைகளில் 15 சதவீத நிதி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவுக்கு ஊக்கத் தொகையாகவும், குறிப்பிட்ட தொகை மருத்துவமனைக்கும் கிடைக்கும்.

மருத்துவமனைக்குக் கிடைக்கும் இந்த நிதியைக் கொண்டு அதன் மேம்பாட்டுக்கும், மருத்துவமனையில் இல்லாத, அரிதான மருந்துகள் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வழங்குவற்கும், மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிதியைக் கொண்டு `டீன்' எந்த ஒரு மருந்து அல்லது பொருள் வாங்கினாலும் அதற்கு அவரது (டீன்) தலைமையிலான துறைத் தலைவர்களை உள்ளடக்கிய 8 பேர் கொண்ட கொள்முதல் செய்யும் (பர்சேஸ் கமிட்டி) குழுவின் ஒப்புதல் பெற வேண்டும்.

ஆனால், `டீன்' தலைமையிலான கொள்முதல் செய்யும் குழுவின் ஒப்புதல் பெற்று நிதி பெறுவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனால், மருத்துவர்கள் சில ஆயிரம்வரையிலான மருந்து, மருத்துவப் பரிசோதனைகள் போன்ற நோயாளிகளின் நலன் சார்ந்தவைகளில் துரிதமாக செயல்பட முடியவில்லை. அதனால், நோயாளிகளுக்கு சில சமயங்களில் சிகிச்சையும், பரிசோதனைகளும் தாமதமாகின்றன. இந்த சிரமத்துக்காக மருத்துவர்கள், சில நேரங்களில் மருத்துவமனையில் இருக்கும் மருந்து, மாத்திரைகள், பரிசோதனைகளைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவக் காப்பீட்டு அறுவைசிகிச்சைகளில் பெறப்படும் நிதியில் சில ஆயிரம் வரை பயன்படுத்துவதற்கு துறைத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: நோயாளிகளுக்குத் தேவையான சில ஆயிரம் ரூபாய் வரையிலான சிறுசிறு தேவைகளைப் பெறுவதற்குக்கூட துறைத் தலைவர்கள், ‘டீன்’ ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டி உள்ளது. கொள்முதல் செய்யும் குழு தினமும் கூடுவது கிடையாது. நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்குவதற்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்டமும், அதன் மூலம் கிடைக்கும் நிதியும் மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது.

சில்லரைச் செலவினங்களுக்கு துறைத் தலைவர்கள் ‘டீன்’ மற்றும் கொள்முதல் செய்யும் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் அந்தந்த சிகிச்சை துறை தலைவர்களுக்கும், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் பெறப்படும் நிதியைக் கையாள்வதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சையும், சேவையும் தடையின்றி கிடைக்க ஏதுவாக இருக்கும், என்று கூறினர்.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஊழல் இல்லாமல் வெளிப்படையாக நிதியைக் கையாளுவதற்கே கொள்முதல் செய்யும் குழு அமைக்கப்பட்டுள் ளது. தரமான நிறுவனத்திடம் மருந்துமாத்திரைகள், உபகரணங்கள் கொள்முதல் செய்யவும், கூடுதல் விலைக்கு வாங்காமல் இருக்கவுமே இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குழு ஒப்புதல் வழங்குவதற்கு ஏற்படும் தாமதம் சரி செய்யப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT