சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 2 நாட்களில் 13,484 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல்ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3,033 பேர், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1,790 பேர், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891 பேர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 பேர் என மொத்தம் 5,869 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 168 பேர், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 4,375 பேர், முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 2,748 பேர், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 178 பேர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 146 பேர் என 7,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது ஒட்டுமொத்தமாக 13,484 ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களில் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 17-ம் தேதி நிறைவு பெறுகிறது.
முடங்கிய எமிஸ் தளம்: இதற்கிடையே எமிஸ் வலைத்தளம் வழியாக பள்ளிக்கல்வி சார்ந்த அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர்களின் பெற்றோர் தொலைபேசி எண்களை சரிபார்த்தல், ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகள் எமிஸ் தளத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த வலைத்தளம் மிகவும் மெதுவாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒரே நேரத்தில் பெரும்பாலான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் திடீரென எமிஸ் வலைத்தளம் நேற்று மதியம் முதலே முடங்கிவிட்டது. இதனால் பள்ளிக்கல்வி சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன. எமிஸ் தளத்தைசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.