கோவை / திருப்பூர்: கோவை, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது.
கடந்த சில தினங்களாக கோவையில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அதேவேளையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. சிவானந்தா காலனி பகுதியில் மரம் விழுந்தது. இதையடுத்து, தீயணைப்பு படையினர் சென்று மரத்தை அகற்றினர்.
இதேபோல திருப்பூர் - தாராபுரம் சாலை அவிநாசிபாளையம் அருகே பி.கே.பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த சரக்குவேன் நிலை தடுமாறி, சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜேந்திரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். திருமுருகன்பூண்டியிலிருந்து கட்டிடம் கட்ட தேவைப்படும் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த இந்த வாகனம், அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கியது.
இதையடுத்து, பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு சாலையில் விழுந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இது தொடர்பாக அவிநாசிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர். கனமழையால் பத்மாவதிபுரம் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.