சென்னை: காசிமேட்டில் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடித் துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை காசிமேட்டில், 600 படகுகளைக் கையாளும் விதமாக கடந்த 1980-ம் ஆண்டு மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. பின்னர், 2 ஆயிரம் படகுகளைக் கையாளும் விதமாக துறைமுகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.200 கோடி செலவில் சூரை மீன்பிடித் துறைமுகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. மீன்பிடித் துறைமுகம் பகுதியில் தென்கிழக்கே கடல் அலை உட்புகாமல் இருக்க 2,801 அடி தூரம் தடுப்புச் சுவர் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், வடகிழக்கே அலையைத் தடுக்கும் விதமாக 1,815 அடி தூரம் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,815 அடி தூரத்துக்கு பெரிய மற்றும் சிறிய படகுகளை நிறுத்துவதற்கான தளங்கள், ஓய்வறை, மீன்கள் ஏலக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. படகு பழுது பார்ப்பு தளம் அமைக்கும் பணி மட்டும் எஞ்சியுள்ளது.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், “காசிமேடு சூரை மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் இத்துறைமுகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்துறைமுகத்தில் 300 சிறிய படகுகள், 500 பெரிய படகுகள் என 800-க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்த முடியும். ஆண்டுக்கு 80 ஆயிரம் டன் மீன்களை கையாள முடியும். மேலும், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்” என்றனர்.