பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஏற்காட்டில் தொடர்ந்து 4-வது நாளாக பெய்த மழை

செய்திப்பிரிவு

சேலம்: கடந்த வாரம் வரை வறண்ட வானிலை நிலவிய ஏற்காட்டில், தற்போது தினந்தோறும் மழை பெய்வதால், அங்கு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நீடிக்கும் நிலையில், மக்கள் குளு குளு சுற்றுலாத் தலங்களுக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர். சேலத்தை அடுத்த ஏற்காட்டுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. கடந்த 11-ம் தேதி சாரல் மழை, 12-ம் தேதி 17.4 மிமீ, நேற்று முன்தினம் 26 மிமீ மழை பதிவானது. இந்நிலையில் நேற்றும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஏற்காடு மக்கள் கூறியது: நடப்பாண்டு கோடையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால், செடி, கொடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் தவித்தோம். குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது. எனவே, ஏற்காட்டின் இதமான தட்பவெப்பம் மறைந்து வறண்ட நிலை காணப்பட்டது. எனவே, நடப்பாண்டு கோடை விழா சிறப்பாக அமையாது என்று கருதினோம்.

ஆனால், கடந்த சில நாட்களாக, ஏற்காட்டில் பெய்துள்ள மழை, இங்கு நிலவிய வறண்ட வானிலையை முற்றிலும் மாற்றியுள்ளது. வெப்பமும் மறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை விழா- மலர்க்கண்காட்சி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

SCROLL FOR NEXT