நாமக்கல்: திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெப்பமும் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் கடுமையாக இருந்தது. சேலம், ஈரோடு மற்றும் பரமத்தி ஆகிய இடங்களில் மழை பெய்த போதும் திருச்செங்கோட்டில் மட்டும் மழை பெய்யாமல் இருந்தது. இதனால் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வானம் கருமேகங்களால் சூழ்ந்தது.
தொடர்ந்து லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை பின் கன மழையாக மாறி சுமார் 45 நிமிடம் கொட்டித் தீர்த்தது. இதனால் சேலம் சாலை, சங்ககிரி சாலை, நாமக்கல் சாலை, ஈரோடு சாலை என நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. கன மழையால் கோடை வெப்பம் தணிந்து குளுகுளு சூழல் நிலவியதால் நகர மக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.