திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை, அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் மிதமான கோடை மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம், சேர்வலாறு, காக்காச்சி, ஊத்து, அம்பாசமுத்திரம் - தலா 1, மணிமுத்தாறு - 15, கொடுமுடியாறு - 12, நம்பியாறு - 10, கன்னடியன் அணைக்கட்டு - 2.6, நாலுமுக்கு, நாங்குநேரி - தலா 2, ராதாபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - தலா 18. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 52 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 86.46 அடியாக இருந்தது. அணைக்கு 90 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 245 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவக் காற்று வீசத் தொடங்கியதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் குறைந்து கோடை மழை பெய்து வருகிறது. மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் தென்காசியில் 9.40 மி.மீ., குண்டாறு அணை, ஆய்க்குடி, செங்கோட்டையில் தலா 5, கருப்பாநதி அணையில் 3.50, அடவிநயினார் அணையில் 3, சங்கரன்கோவிலில் 2, சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது. குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்தது.