சென்னை: நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமிக்கு நாய்களின் உரிமையாளரும், தமிழக அரசும் உதவ வேண்டும் என்று தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது லேன் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளி மற்றும் பராமரிப்பாளராக வேலை செய்து வருபவர் விழுப்புரத்தை சேர்ந்த ரகு. மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுரக்ஷாவுடன் பூங்காவிலேயே வசித்து வருகிறார்.
கடந்த 5-ம் தேதி இரவு சிறுமி சுராக்ஷாவை பூங்காவின் எதிர் வீட்டில் புகழேந்தி என்பவரால் வளர்க்கப்பட்ட 2நாய்கள் கடித்து குதறியது.பலத்தகாயமடைந்த சிறுமிக்கு ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோமருத்துவமனையில் கடந்த 9-ம் தேதிபிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாய்களின் உரிமையாளர் சொன்னபடி ரூ.15 லட்சம் கொடுத்தால்தான் சிறுமியை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்வோம் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ரகு கூறுகையில், “எனது குழந்தையை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்துவிட்டால், வெயிலில்தான் தங்க வேண்டியிருக்கும். என் வீட்டில் மின்விசிறிகூட இல்லை.
எனவே, தமிழக முதல்வர் என் குழந்தைக்கு உதவ வேண்டும். குழந்தை வளரும் வரை அவருக்கான உதவியை தமிழக அரசும், நாயின் உரிமையாளரும் செய்ய வேண்டும். எனக்கு பணமாக எதையும் தர வேண்டாம். பின்வரும் காலத்தில் குழந்தைக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உதவ முன்வர வேண்டும்” என்றார்.