சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16-ம் தேதிக்குள் 12 நாட்களில் 4 பேர் போலீஸ் காவலில் மரணம் என்று செய்தி வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மதுரை மதிச்சியம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி கார்த்திக் (32) என்பவர் வழக்கு ஒன்றில் ஏப்.2 அன்று கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார்.
அவருக்கு மறுநாள் அதிகாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2 நாள் கழித்து ஏப்.5-ம் தேதி அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதேபோல் கடந்த ஏப்.10 அன்று விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பாச்சாவடி பகுதியில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை வைத்திருந்த ராஜா (43) என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே பல்வேறு சாராய வழக்குகளில் தொடர்புடையவர்.
இவர் ஜாமீனில் வீட்டுக்கு சென்றபின் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது மனைவி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துள்ளார்.
இதேபோல் கடந்த ஜன.22 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் சிவகாசியைச் சேர்ந்த ஜெயகுமார் (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த நிலையில் காசநோய் காரணமாக பிப்.7-ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஏப்.15-ம் தேதி நள்ளிரவு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அவர் இறந்துள்ளார்.
மேலும் ஏப்.13 அன்று ஆவடி மாநகர் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புட்லூர் அருகே இருந்த 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 கொலை 2 கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பெரும்புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி சாந்தகுமார் (30) என்பதும் மற்றவர்கள் அவரது கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக செவ்வாப்பேட்டை போலீஸார் விசாரித்த நிலையில் சாந்தகுமார் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது இறந்தார். பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர் அவருக்கு 90 சதவீதம் இதய அடைப்பு இருந்ததாக கூறியுள்ளார். இந்த 4 சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.