சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்தும் முறை, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 குறைப்பு, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
500 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படவில்லை. 90 நாட்களில் கோடநாடு கொலை வழக்கு முடிக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களையும் நிரப்பவில்லை. கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.
அன்றாடம் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் நடைபெற்று வருகிறது. மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், கள்ளச்சாராயம் கொடிகட்டி பறக்கின்றன. தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர். அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், வீடு கட்டுவோர், காவல் துறையினர் என அனைவரும் திமுகவினரால் மிரட்டப்படுகின்றனர். சில சமயங்களில் தாக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் செயலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் கூறுகிறார். உண்மையில் தமிழ்நாட்டில் ‘செயலற்ற’ ஆட்சி, ‘பொய்யாட்சி’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ‘பொய்யாட்சி’ தூக்கி எறியப்பட்டு ‘செயலாட்சி’ ஏற்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.