மதுரை புட்டுத்தோப்பு கர்டர் பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிய பார்வையற்றோர் இசைக் குழுவின் வேனில் இருந்த பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

தொடரும் மழையால் தணிந்த வெப்பம்: மதுரையில் பல இடங்களில் சிக்கிய வாகனங்கள்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் தேங்கிய நீரில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின.

கடந்த சில நாட்களாக மதுரை நகர், புறநகர், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. மதுரை நகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால் மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி ரோடு பகுதியில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அண்ணா நகர், காமராஜர் சாலை, கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், கீழவாசல், மேல வெளி வீதி, மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, புட்டுத்தோப்பு கர்டர் பாலம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. புட்டுத்தோப்பு அருகே ரயில்வே கர்டர் பாலத்தின் கீழ் சுரங்கப் பாதையில் ஆறு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதில் பார்வையற்றோர் பாடகர் குழுவின் வேன் சிக்கியது.

தகவல் அறிந்த போலீஸார் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி வேனில் இருந்தவர்களை மீட்டனர். கோரிப்பாளையம் ஏ.வி.பாலம் அருகே உள்ள தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய நீரில் இரு சக்கர வாகனங்கள் சிக்கின. கார் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக சென்றன. மழையால் வெப்பம் தணிந்து நிலத்தடி நீர் பெருகும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மேல வெளி வீதி சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்.

மதுரை மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): விமான நிலையம் - 10, விரகனூர் - 2, மதுரை வடக்கு - 15.2, சிட்டம்பட்டி - 18.4, கள்ளந்திரி - 48, தல்லாகுளம் - 14.6, மேலூர் - 14, புலிபட்டி - 40.8, சாத்தையாறு அணை - 5.8, மேட்டுப்பட்டி - 48.6, ஆண்டிபட்டி - 6.2, உசிலம்பட்டி - 64, குப்பணம்பட்டி - 33, கள்ளிக்குடி - 19.4, திருமங்கலம் - 23.4, பெரியபட்டி - 30.2, எழுமலை - 0.4. மாவட்டத்தின் சராசரி மழையளவு 17.91 மி.மீட்டர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் குளம் போல தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.

அணைகளில் நீர் கொள்ளளவு: பெரியாறு அணை- 114.95 அடி (மொத்த கொள்ளளவு 152 அடி). அணைக்கு 100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 100 கன அடி வெளியேற்றப்படுகிறது. வைகை அணையில் மொத்த கொள்ளளவான 71 அடியில் 56.41 அடி நீர் உள்ளது. தற்போது 68 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட குடிநீருக்காக 3,072 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையின் மொத்த கொள்ளளவான 29 அடியில் 9.40 அடி தண்ணீர் உள்ளது.

SCROLL FOR NEXT