கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில்:
"தமிழ்நாட்டில் தற்போது 17 மாவட்டங்களில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியும் இல்லாததைக் கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்:
மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், 32 கோடியே 81 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதுவன்றி, மேலும் 12 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 31 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
புதிய அரசு வட்ட மருத்துவமனைகள் உருவாக்கப்படும்:
நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் ஏற்கெனவே உள்ள பெரிய வட்டங்களை பிரித்து, புதிய வட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. பல புதிய வட்டங்களில் தற்போது அரசு வட்ட மருத்துவமனை இல்லை. அரசு வட்ட மருத்துவமனை இல்லாத புதிய வட்டங்களில், புதிய அரசு மருத்துவமனைகளை படிப்படியாக ஏற்படுத்தும் வகையில், முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 வட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25 கோடி ரூபாய் செலவில் வட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்படும்:
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரும் பொருட்டு, புற நோயாளி பிரிவு, முடக்கியியல் பிரிவு, சிறு நீரகவியல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சிறு நீரகவியல் மருத்துவப் பிரிவு ஆகியவற்றிற்கு 50 கோடி ரூபாய் செலவில் அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்படும்.
டயாலிசிஸ், டயாக்னோசிஸ், டயாபிடிஸ் மையங்கள் நிறுவப்படும்:
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், தனியார் அமைப்புகளுடன் இணைந்து டயாலிசிஸ், டயாக்னோசிஸ், டயாபிடிஸ் மையங்கள் நிறுவப்படும். இந்த மையங்களில் கூடுதலாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன்கள் நிறுவப்படும்.
டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் அமைக்கப்படும்:
நடப்பாண்டில், மணப்பாறை, உடுமலைப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, வாலாஜா, திருப்பத்தூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, பரமக்குடி, மேட்டுப்பாளையம், ஆத்தூர் மற்றும் செய்யார் ஆகிய 12 அரசு மருத்துவமனைகளுக்கு எக்ஸ்ரே படத்தை பாதுகாத்து அனுப்பும் வசதியுடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
பொள்ளாச்சி, கடலூர், பென்னாகரம், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், பத்மநாபபுரம், கரூர், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மேட்டூர் அணை, காரைக்குடி, கும்பகோணம், உதகமண்டலம், பெரியகுளம், திருவள்ளூர், தென்காசி, திருப்பூர், செய்யார், மன்னார்குடி, மணப்பாறை, கோவில்பட்டி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், வேலூர் மற்றும் அரியலூர் ஆகிய 31 அரசு மருத்துவமனைகளுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மற்றும் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கான கருவிகள் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
நடப்பாண்டில் 21 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
புதிய விடுதிகள் கட்டப்படும்:
மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவியர்கள், அவர்கள் தங்கி படிக்க வசதியாக, சென்னை மருத்துவக் கல்லூரியில் 6 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் புதிய விடுதிகள் கட்டப்படும்" இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.