திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலையை சேர்ந்தவர் பால்பாண்டி (28). கறிக்கடை தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (26). கர்ப்பிணியான கவுசல்யா, கடந்த மாதம் 15-ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நாளில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மகப்பேறு மருத்துவரின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒரு பெண் குழந்தை,2 ஆண் குழந்தைகள் என 3 குழந்தைகள் பிறந்தன. இதில் 2 குழந்தைகள் ஒன்றரை கிலோவும், மற்றொரு குழந்தை 1.750 கிலோவும் இருந்தன. இக்குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தைகள் நலத்துறை மருத்துவப் பேராசிரியர் உமாசங்கர் தலைமையிலான பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பான முறையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
குழந்தைகள் முழு உடல்நலன் தேறிய நிலையில்25 நாட்களுக்குப் பிறகு, நேற்று தாயும், குழந்தைகளும் வீடு திரும்பினர். சிறப்பாக சிகிச்சை மேற்கொண்டு குழந்தைகளை பராமரித்த மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் பாராட்டினார்.