சென்னை: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரின் சென்னையில் உள்ள வீடு, அலுவலகத்தில் தேனி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனல் முதன்மை செயல்அதிகாரி சங்கர், தேனி மாவட்டத்தில் தங்கி இருந்தபோது கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, சவுக்கு சங்கர்மீது சேலம், திருச்சி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அந்த வழக்கு களிலும் அவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்.
முன்னதாக சவுக்கு சங்கருடன் தேனியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த ராஜரத்தினம்(42), கார் ஓட்டுநர் ராம்பிரபு(28) ஆகியோரது காரை சோதனை செய்தபோது அதில் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதுதொடர்பாக இருவரையும் தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்திலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீஸார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அவர் தொடர்புடைய இடங்களில் கஞ்சா பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? என்பதைக் கண்டறியவே இச்சோதனை நடைபெற்ற தாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது.
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்: சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே 2 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றி அவதூறு பரப்பியதாக கொடுக்கப் பட்ட புகாரில் சவுக்கு சங்கர் மீதுமேலும் ஒரு வழக்கை சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் சவுக்கு சங்கர் மீதுபதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 6 வழக்குகள்: இதற்கிடையே, சென்னையில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக கோவையிலிருந்து காவல் வாகனத்தில் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு நேற்று இரவு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.