சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளருக்கு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்முறையாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் ராஜேஷ் (36). எழும்பூர் பகுதியில் வசிக்கிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக இதய பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பொதுவாக இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 60-100 என்று இருக்கும் நிலையில், ராஜேஷுக்கு 200-க்குமேல் இருந்து வந்துள்ளது. இதனால், திடீரென பதற்றமாகி மயங்கிவிழுந்துவிடுவார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தும், குணமாகவில்லை.
இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்தில் நிரந்தரமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த சிகிச்சைக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரைசெலவாகும் என்றும் கூறினர்.
ஏழ்மையான குடும்பம் என்பதால், தங்களால் அவ்வளவு செலவிட முடியாது என்று அவரது குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் ராஜேஷுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனையின் மூத்த இதயவியல்நிபுணர் தணிகாசலம் கூறும்போது,‘‘ராஜேஷின் நெஞ்சு பகுதியில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதயத் துடிப்பு அதிகரித்தால், பேஸ்மேக்கருக்கு தகவல் அனுப்பப்பட்டு, கம்பி வழியாக சிறிய மின்விசையை உருவாக்கி அந்த படபடப்பை அக்கருவி சரிசெய்யும்’’ என்றார்.
இதயவியல் நிபுணர் பிரீத்தம் கூறியபோது, ‘‘ராஜேஷுக்கு அடிக்கடி படபடப்பு ஏற்பட்டு மயக்கம்அடைந்ததால், மருத்துவமனையில் மின் அதிர்ச்சி (ஷாக்) கொடுக்கப்பட்டு அவ்வப்போது சரி செய்துவந்துள்ளனர். 8 முறைக்கு மேல்இதுபோன்று ஏற்பட்டால், உயிரிழக்கும் அபாயம் உண்டு. எனவே, ஐசிடி பேஸ்மேக்கர் பொருத்த பரிந்துரை செய்தோம்.
வெளிநாட்டில் இருந்து அக்கருவி வரவழைக்கப்பட்டு, அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்’’ என்றார்.