சென்னை: மின் தடையை கண்டித்து மடிப்பாக்கத்தில் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்டது மடிப்பாக்கம். இங்கு கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக ராம் நகர், சதாசிவம் நகர், குபேரன் நகர், ராஜாஜி நகர், சீனிவாசா நகர் ஆகிய பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் 11 மணிக்குள், சுமார் 5 முறை அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் மின்தடை குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு ஊழியர்மது போதையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், உதவி பொறியாளரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போன் அழைப்பைஎடுத்து பதில் அளிக்கவில்லையாம்.
இதனால் மின் வாரிய ஊழியர்களுடன் பொது மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து பொதுமக்களை சமாதானம் செய்துள்ளனர். மின் விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைஅடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.