பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே உயர்மட்ட பாதை பணி தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான 5-வது வழித்தடத்தில் மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட பாதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

சென்னையில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக 3 வழித்தடங்களில் மொத்தம் 116.1 கி.மீ. தூரத்துக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில்ஒன்றான மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான 5-வது வழித்தடம் 44.6 கி.மீ. தூரம் கொண்டது. இந்த வழித்தடத்தில் 39 உயர் மட்ட ரயில் நிலையங்கள், 6 சுரங்கரயில் நிலையங்கள் அமைகின்றன.இதில், உயர்மட்ட பாதை பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கொளத்தூர், ரெட்டேரி பகுதிகளில் தூண்களுக்கு மேல் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது போல, மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளிலும் உயர்மட்ட பாதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான 5-வது வழித்தடத்தில் கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான பாதை தவிர, எஞ்சிய 39.6 கி.மீ. தூரம் முழுவதும் உயர்மட்ட பாதை அமைக்கப்படுகிறது. இதை 3 பகுதிகளாக பிரித்து பணிகள் நடக்கின்றன.

ரெட்டேரி, கொளத்தூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பிரத்யேக கனரகஇயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் அடுத்த 7மாதங்கள் வரை நடைபெறும். திட்டமிட்டபடி, இந்த வழித்தடத்தில் 2027-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT