சவரிக்காட்டில் கொடைக்கானல் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை.( வலது ) வட கவுஞ்சி அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரம். 
தமிழகம்

கொடைக்கானலை குளிர்வித்த மழை - சாலையில் மரம், பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழையில் வடகவுஞ்சி பகுதியில் மரம் சரிந்து விழுந்தது. சவரிக்காடு அருகே ராட்சதப் பாறை உருண்டு விழுந்தது. இதனால், இச்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் இரவில் குளிர் நிலவினாலும், பகலில் தரைப் பகுதியை போல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொடைக்கானல் மலைப் பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் தொடங்கிய மழை 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. மழையில் நனைந்தபடி ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சுற்றுலா இடங்கள் மற்றும் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

மழையால் வடகவுஞ்சி பகுதியில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதேபோல், பழநியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் சவரிக்காடு அருகே ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இந்த 2 சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் சாலையின் குறுக்கே சாய்ந்து கிடந்த மரம் மற்றும் பாறையை அகற்றினர்.

கொடைக்கானலில் வெயிலின் தாக்கத்தால் கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. கடும் முயற்சிக்கு பின்பு தீயை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அணைத்தனர். தற்போது கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால், காட்டுத் தீ ஏற்படுவது குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT