தமிழகம்

வண்டலூர், பழவேற்காடு நீர்நிலைகளில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வண்டலூர்/திருவள்ளூர்: வண்டலூர் கல்குவாரி குட்டை நீர், பழவேற்காடு, மீஞ்சூர், திருவேற்காடு பகுதிகளில் கடல் மற்றும் ஏரிகளில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வண்டலூர் அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல் குவாரி உள்ளது. இந்நிலையில் பொத்தேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கல் குவாரியில் சுமார் 200 அடி ஆழம் கொண்ட குவாரி பள்ளத்தில் நேற்று முன் தினம் மாலை 4 மணியளவில் குளித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது, நீச்சல் தெரியாத 3 பேர் ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் மூழ்கினர். தகவலறிந்த செங்கை மாவட்ட காயார் போலீஸார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, 3 உடலையும் மீட்டனர்.

விசாரணையில் அவர்கள்திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தீபக் சாரதி (20), தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (19), தருமபுரி மாவட்டம் கோபிநாத் பட்டியைச் சேர்ந்த விஜய் சாரதி (19) என்று தெரியவந்தது.

சென்னை, மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40). ஆவடி தனியார் நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் 11 பேருடன்நேற்று முன் தினம் மதியம் பழவேற்காடு கடல் பகுதிக்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர் பாராதவிதமாக செந்தில்நாதன் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கரண் சிங் (22), தன் நண்பர்களுடன், மீஞ்சூர் அருகே உள்ள வெள்ளம்பாக்கம் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற கரண் சிங் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவேற்காடு, மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைநம்பி. இவரின் மகன் தயாநிதி(15). இவர், திருவேற்காடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்படித்து, 10-ம் வகுப்பு தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை தயாநிதி, தன் நண்பரான அம்ரித்(14) உடன் , திருவேற்காடு- எம்ஜிஆர் நகரை ஒட்டியுள்ள அயனம்பாக்கம் ஏரிக்கு குளிக்கசென்றார். அப்போது, தயாநிதி தெர்மாகோல் மீது படுத்து குளித்து கொண்டிருந்த போது, திடீரென தெர்மாகோல் உடைந்தது. இதனால், தயாநிதி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT