சென்னை: விளையாடும் போது எல்இடி பல்பை விழுங்கிய 5 வயது சிறுவன் உயிரை அதிநவீன சிகிச்சை மூலம் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். சிறுவன் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அதிகளவிலான இருமலும், மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருந்த அச்சிறுவனை கண்ட பெற்றோர் எழும்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து பார்த்தபோது, நுரையீரலில் சிறிய அளவிலான மர்ம பொருள் இருந்ததை கண்டறிந்தனர்.
அப்போதுதான், சிறுவன் மர்ம பொருள் எதையோ விழுங்கி விட்டான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ப்ராங்கஸ்கோபி எனப்படும் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறை மூலம் சிறுவனின் நுரையீரலில் இருந்து 2 முறை அந்த மர்ம பொருளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சித்தனர்.
ஆனாலும், 2 முறையும் மருத்துவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 26-ம்தேதி சிறுவனை அனுமதித்தனர்.
அங்கு குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவத் துறை தலைவர் டாக்டர் மது தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தனர். பின்னர், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் அருணா பரமேஸ்வரி உதவியுடன் அதிநவீன ப்ராங்கஸ்கோபி சிகிச்சை கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல், சிறுவனின் நுரையீரலில் இருந்த மர்ம பொருளை வெளியே எடுத்தனர். வெளியே எடுத்த பிறகு தான் அது, எல்இடி பல்ப் என தெரியவந்தது. இதையடுத்து, உடல் நிலை சீரான நிலையில், தற்போது சிறுவன் வீடு திரும்பி உள்ளான்.