கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் போதிய தண்ணீரின்றி கருகிய சோயா பீன்ஸ் செடிகளை காட்டும் விவசாயி. 
தமிழகம்

‘சீரற்ற மும்முனை மின்சாரம்’ - பந்தநல்லூரில் தண்ணீரின்றி கருகிய சோயா பீன்ஸ் செடிகள்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் மும்முனை மின்சாரம் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், மின்மோட்டார் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால், போதிய தண்ணீரின்றி சோயா பீன்ஸ் செடிகள் கருகி வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர், திருப்பனந்தாள் பகுதிகளில் விவசாயிகள் 150 ஏக்கரில் பம்புசெட் மூலம் பாசனம் பெற்று சோயா பீன்ஸ் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அந்த செடிகளில் பிஞ்சும், காய்களும் உள்ளன. இன்னும் 3 வாரங்களில் அவை அறுவடைக்கு தயாராகிவிடும். இந்நிலையில், இப்பகுதியில் பம்புசெட்டுக்கு மும்முனை மின்சாரம் சீராக விநியோகிக்கப்படுவதில்லை.

மேலும், மின்சாரம் விநியோகிக்கும் போது, குறைந்தழுத்த மின்சாரமே கிடைப்பதால் பம்பு செட்களை இயக்க முடிவதில்லை. இதனால், பம்புசெட் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. இதன்காரணமாக போதிய தண்ணீர் இன்றி சோயா பீன்ஸ் செடிகள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால், மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு பெரும்பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நெய்குப்பம் விவசாயி கலைமணி கூறியது: பந்தநல்லூர், திருப்பனந்தாள், குறிச்சிஉள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறை ஆலோசனையின் படி சோயா பீன்ஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில், பம்புசெட்களை இயக்க மும்முனை மின்சாரம் முறையாக விநியோகம் செய்யப்படாததால், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால், போதிய தண்ணீர் இல்லாமல் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் சோயாபீன்ஸ் செடிகள் கருகி வருகின்றன. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும், மகசூல் இழப்பு ஏற்படும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே, கருகிய பயிரை காப்பாற்ற மும்முனை மின்சாரத்தை சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மும்முனை மின்சாரம் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் விநியோகம் செய்யப்படுகிறது. எனினும், மும்முனை மின்சார விநியோகத்தில் அவ்வப்போது தடங்கல் இருப்பதால், மின் மோட்டார்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. விவசாயிகள் பலரும் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இப்பகுதியில் சீரான மும்முனை மின்சாரம் விநியோகம் செய்ய துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT