வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்த நிலையில் குடியாத்தம் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சராசரியாக 107 டிகிரி அளவுக்கு வெளியில் சுட்டெரித்து வந்தது. மேலும், இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் அளவாக 110.7 டிகிரியாகவும், நேற்று மாலை நிலவரப்படி 110.5 டிகிரியாகவும் வெயில் சுட்டெரித்தது. இந்தாண்டு வழக்கத்தைவிட மே மாதம் கடுமையான வெயில் சுட்டெரிக்கும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோடை மழை வருமா? என எதிர்பார்ப்பு கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தெரியாமல் இருந்த நிலையில் குடியாத்தம் சுற்று வட்டார பகுதியில் மட்டும் நேற்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. வளத்தூர் உள்ளிட்ட சில பகுதியில் திடீர் ஆலங்கட்டி மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் குடியாத்தம் நகர பகுதியில் அனல் வீசிய காற்றால் அவதிக்குள்ளாகினர். வேலூர் சுற்று வட்டார பகுதியிலும் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் இரவு 8 மணிக்கு லேசான தூறல் பெய்தது.