கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தில் தினசரி மின்தேவை புதிய உச்சம்: 20,701 மெகாவாட்டாக பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் மின்தேவை நேற்று முன்தினம் 20,701 மெகாவாட் என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

தமிழகத்தின் சராசரி மின்நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது.

இதற்கேற்ப தமிழகத்தின் மின்தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் 20-ம் தேதி இதுவரை இல்லாத அளவாக 19,387 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது. அன்றைய தினம் 42.37 கோடி யூனிட்டாக மின் பயன்பாடு இருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 2 மாதகாலமாக மின்தேவையும், மின்நுகர்வும் தொடர்ச்சியாக அதிகரித்து புது புது உச்சத்தை அடைந்துவருகிறது. இறுதியாக கடந்த மாதம் 26-ம் தேதி 45.17 கோடி யூனிட் மின்நுகர்வு, 20,583 மெகாவாட்மின்தேவை என்பதே அதிகபட்ச அளவாக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் 45.43 கோடி யூனிட் என்னும் புதிய உச்சத்தை மின் பயன்பாடு அடைந்தது. இதற்கேற்ப அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் 20,701 மெ.வாஎன்றளவில் மின்தேவை இருந்தது.வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT