சென்னை: நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலவின் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை தயாரித்தது. இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்ஏவப்பட்டது. தொடர்ந்து பல்வேறுகட்ட பயணங்களுக்கு பின்னர் விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் ஆகஸ்ட் 23-ம்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. அதன்பின் லேண்டர் தரை இறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களையும், படங்களையும் அனுப்பியது.
இதையடுத்து சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தில் கிடைக்கப் பெற்ற தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தொடர்ந்து பகுப்பாய்வு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
நிலவின்துருவப் பகுதிகளில்.. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு விவரம்: இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பாக ஆய்வு செய்து வந்தனர். இதில் நிலவின்துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நிலவில் முதல் இரண்டு மீட்டர்களில் உள்ள பனியின் அளவு இரு துருவங்களின் மேற்பரப்பில் உள்ளதை விட 5 முதல் 8 மடங்கு பெரியதாகும். சந்திரனில் துளையிட்டு அவற்றின் மாதிரியை ஆய்வு செய்ய வேண்டும். இது எதிர்கால நிலவு பயணங்களுக்கு உதவியாக அமையும். மேலும், வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு, தென் துருவப் பகுதியை விட 2 மடங்கு அதிகமாகும். இதுசார்ந்து ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.