செந்தில் பாலாஜியுடன், அவரது தம்பி அசோக்குமார். (கோப்பு படம்) 
தமிழகம்

என்ன ஆனார் செந்தில் பாலாஜியின் தம்பி? - கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ‘சுவிட்ச் ஆஃப் மோடில்’ அசோக்குமார்

செய்திப்பிரிவு

கரூர்: வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகள் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதுவரை எங்கு உள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகாவது அவர் வெளியே வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2011-2015 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்கு வரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடு பட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கரூர் ராம் நகரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த புதிய பங்களாவில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பினர். ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகாமல், தொடர்ந்து 10 மாதங்களாக தலை மறைவாகவே இருந்து வருகிறார்.

தலைமறைவு... அவர் வெளிமாநிலத்தில் தலை மறைவாக இருப்பதாகவும், வெளி நாடு தப்பிவிட்டார் என்றும் தகவல் கள் பரவி வருகின்றன. இதனி டையே, கரூர் ராமேஸ்வரபட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அசோக் பார்த்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர்இதுவரை அமலாக்கத் துறையினரிடம் சிக்கவில்லை.

ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ, அதைப் பொறுத்தே அசோக் வெளியில் வருவாரா, இல்லையா என்பது தெரியவரும்.

2011-2015 காலகட்டத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறை ஒப்பந்தங்கள், கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் என அனைத்தும் அவரது தம்பி அசோக் குமார் கட்டுப்பாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக கூறப் பட்டது. அந்த துறையின் அதிகார மையமாகவே அசோக் மாறினார்.

மேலும், அவர் மீது நில மோசடி, ஆள்கடத்தல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. அப்போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு, அவரது தம்பி ராமஜெயம் இருந்ததுபோல, செந்தில் பாலாஜிக்கு அசோக் குமார் என்று ஒப்பிடப்பட்டார்.

SCROLL FOR NEXT