நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே சிபிசிஎல்எண்ணெய் நிறுவன விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூர் அருகேபனங்குடியில் உள்ள மத்திய அரசின் பொது பணித் துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலையையொட்டி, ரூ.31,500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கையகப்படுத்திய நிலத்துக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காமல், சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால், பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம மக்கள், மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும் இந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வுகாண இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், சிபிசிஎல் நிறுவனம் நிலத்தை அளவீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் எந்த ஒரு பணியையும் சிபிசிஎல் நிறுவனம் சம்பந்தப்பட்ட நிலத்தில் தொடங்கினால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தடுத்து நிறுத்துவோம் எனக் கூறி, பனங்குடி பகுதியில் விவசாய நிலத்தில் பந்தல் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் சாகுபடிதாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் முழுமையாக கணக்கெடுப்பு செய்து, உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை உண்ணா விரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். அங்கு போராட்டக்காரர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், நாகை துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.