விழுப்புரம்/சென்னை: விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப். 6-ல் காலமானார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவுடன், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதற்கான அறிவிப்பு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கடும் வெப்ப அலை வீசுகிறது. மேலும்,மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்கும் என்றும், 116 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இத்தகைய சூழலில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டால், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். மேலும், வெப்ப மயக்க நோய் (Heat Stroke) ஏற்பட்டால் உயிரிழப்புகூட ஏற்படலாம்.
எனவே, தமிழக அரசு மற்றும் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி, அதற்குப் பின்னரே விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தீர்மானிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.