சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பிராட்வேயில் இருந்துதான் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேட்டுக்கு பேருந்துகள் மாற்றப்பட்டதால், பிராட்வேயில் இருந்து மாநகர பேருந்துகள் மட்டும் இயங்கி வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.823 கோடி மதிப்பீட்டில் பிராட்வேயில் நவீன வசதிகள் கொண்டமல்டி மாடல் பேருந்து முனையம்கட்டப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டது. இதனால் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு, பிராட்வேயில் மல்டி மாடல் பேருந்துமுனையம் கட்டப்படவுள்ளது.
பிராட்வேயில் செயல்படும் குறளகத்தையும் சேர்த்து இடித்துவிட்டு சுமார் 14 லட்சம் சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. அதன்படி, 8 மாடி கொண்ட பேருந்து முனையத்தில் 2 தளங்களில் பேருந்து நிறுத்தும் இடம், உணவகங்கள், ஓய்வறைகளும், மீதமுள்ள 6 தளங்கள் வணிக பயன்பாட்டுக்கும் விடப்படும்.
இதேபோல், குறளகத்தில் 9 தளம் கொண்ட கட்டிடம் அமைத்து, பேருந்து முனையத்தோடு இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை, அடித்தளத்தில் வாகன நிறுத்தும் இடம் போன்ற நவீன அம்சங்களுடன் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.