மதுரை: திரைப்படங்களில் ‘ஆண்டிப் பண்டாரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த கலாதேவி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: திரைப் படங்கள், சின்னத் திரை தொடர்களில் ‘ஆண்டிப் பண்டாரம்’ எனும் வார்த்தையை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஒருவரை இழிவுபடுத்தும் காட்சிகளில் அந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்து கின்றனர். நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் என்ற படத்தில், பாடலில் இடம் பெற்ற ‘பண்டாரத்தி’ என்ற வார்த்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது.
அதே நேரத்தில் நீதிமன்றம் பயன்படுத்தக் கூடாது என உத்தர விட்டும் ‘ஆண்டி பண்டாரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது தொடர்கிறது. இதைத் தவிர்க்க அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே திரைப் படங்களில் பண்டாரம் என்ற வார்த்தை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்கவும், இனிமேல் திரைப்படங்களில் ‘ஆண்டிப்பண்டாரம்’ எனும் சமூக பெயரை யாரும் இழிவுபடுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.