மதுரை: மதுரையில் கோடை வெயிலில் மக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல பகல்வேளையில் தினமும் லாரிகள் மூலம் நகர் சாலைகளில் தண்ணீரை ஊற்றி குளிர்விப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரை, சென்னை, சேலம், திருச்சி, வேலூர் உட்பட பல்வேறு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மதுரை மாநகரில் கடந்த 2 மாதமாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
வெப்பத்தின் உக்கிரத்தால் வாகனப் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த காலங்களில், மதுரை யில் கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்து வந்தது. ஆனால், நடப்பாண்டு கோடை மழை முற்றிலும் ஏமாற்றியதால் கோடை வெயில் வழக்கத்துக்கு மாறாக இருந்து வருகிறது. கடந்த சில வாரமாக, பகல் நேரத்தில் மதுரை மாநகர் சாலைகள் தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலையை எட்டுகிறது.
இந்த வெப்பத்தின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க தினமும் பகல் வேளையில் முக்கிய சாலைகளில் லாரி தண்ணீரை ஊற்றி வருகிறது. ஏற்கெனவே, வார்டுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத குடியிருப்புகளில் லாரிகள் மூலம் குடிநீரை வழங்குகின்றனர்.
தற்போது குடிநீர் விநியோகம் தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் தண்ணீரை ஊற்று வதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது..இதனால் புழுதி பறக்காமல் சிறிது நேரத்துக்கு வெப்பம் குறைந்து வாகனப் போக்குவரத்துக்கு சுலபமாக உள்ளது. இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர் சாலைகளை குளிர்விக்க மட்டுமில்லாமல் தூசி பறக்காமல் இருக்கவும் லாரி தண்ணீர் ஊற்றப்படுகிறது.
சாலைகளில் குவிந்துள்ள மண்ணை, மண் உறிஞ்சும் வாகனம் மூலம் அப்புறப்படுத்துகிறோம். பகல் நேரத்தில் அனல் காற்று வீசும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. அதனால் கடந்த 2 மாதமாகவே முக்கியச் சாலைகளில் பகல் வேளையில் மாநகராட்சி லாரி மூலம் தண்ணீரை ஊற்றுகிறோம். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பத்தை தணிக்கவும் இந்த நடவடிக்கை உதவுகிறது என்று கூறினார்.