தமிழகம்

ரங்கராஜன் நரசிம்மன் மெய்த்தன்மையை நிரூபித்தால்தான் டெபாசிட் தொகை திருப்பி தரப்படும்: ஐகோர்ட் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: கோயில்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடரும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், தனது வழக்குகளின் நோக்கத்துக்கான மெய்த்தன்மையை நிரூபித்தால் மட்டுமே அவர் டெபாசிட் செய்துள்ள ரூ.3.50 லட்சம் திருப்பி கொடுக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

இந்த 7 வழக்குகளுக்கும் அவர்தனது நோக்கத்துக்கான மெய்த்தன்மையை நிரூபிக்கும் வகையில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.50 லட்சத்தை உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தால் மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அவர் அந்த தொகையை செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்குதலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, ‘‘எனது பொதுநல மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், நான் செலுத்திய டெபாசிட் தொகை ரூ.3.50 லட்சத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரினார்.

திருப்பி அளிக்க முடியாது: அதையேற்க மறுத்த நீதிபதிகள், ‘‘அந்த மனுக்களுக்கு எதிர்மனுதாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வழக்கின் நோக்கம் குறித்த மெய்த்தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் தொகையை திருப்பிக்கொடுக்க முடியும். தற்போதைய சூழலில் திருப்பி அளிக்க முடியாது’’என மறுப்பு தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT