கடலூர்: கடலூர் மாவட்டம் கட்டுமன்னார்கோவில் அருகே முதலை கடித்து மூதாட்டி காயமடைந்தார்.
காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70). இவர் நேற்று முன்தினம் தனது ஆடுகளை கொள்ளிடம் ஆற்றங்கரைப் பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது ஆற்றங்கரையில் படுத்திருந்த முதலை திடீரென சின்னம்மா காலைப் பிடித்து இழுத்து, கடித்துக் குதறியது. மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை முதலையிடம் இருந்து மீட்டனர்.
முதலை கடித்ததில் சின்னம்மாவுக்கு இடது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.