சென்னை: வாக்குப்பதிவு நாளில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினமான ஏப்.19-ம் தேதியன்று தினக்கூலி உட்பட அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விடுமுறை அளிப்பது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் மற்றும் மதுரை போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில், பொது விடுமுறையானது வாக்களிப்பு ஆரம்ப நேரத்தில் இருந்து முடியும் நேரம் வரையுள்ள முறைப்பணிகளுக்கு (ஷிப்ட்) மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையானது தேர்தல் ஆணையம் மற்றும் தொழிலாளர் துறை வெளியிட்ட உத்தரவுக்கு புறம்பானது.
சட்டப்படி நடவடிக்கை: மேலும், இந்த சுற்றறிக்கையில், போக்குவரத்துத் துறையின் கடிதம் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழங்களிலும் முறைப்பணியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. எனவே, இது சம்பந்தமாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.