தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாததால் அங்குபணியாற்றும் தூய்மைப் பணியாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணிக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும்.

மன்னார்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரைஎடுக்கப்படாததே சுகாதாரத் துறையில் இதுபோன்ற தொடர்சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும்.

எனவே, இனியாவது அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முறையான சிகிச்சை வழங்க தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT