சிவகங்கை: வழக்கறிஞர்கள் மனசாட்சிப்படி நேர்மையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புர்வாலா தெரிவித்தார்.
சிவகங்கை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.9.82 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் நீதிமன்றக் கட்டிடத் திறப்புவிழா நடைபெற்றது. கட்டிடத்தைத் திறந்து வைத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புர்வாலா பேசியதாவது: வேலுநாச்சியார் தனிநபராக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சிவ கங்கை மாவட்ட மக்கள் தங்களது தியாகத்தை அளித்துள்ளனர்.
17-ம் நூற்றாண்டில் மருது சகோதரர்கள் காலத்திலேயே நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. பழமையான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து வருகின்றனர். கீழடி அகழ் வைப்பகம் மூலம் வரலாற்றை நேரடியாக அறிந்து கொள்ள முடிகிறது. பொதுமக்களுக்குச் சம நிலையான, உண்மையான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களை நாடி வரும் மக்களுக்கு காலதாமதமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும். இதற்கு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
வழக்கறிஞர் வழக்கில் தோற்றாலும் தனது கட்சிக் காரரை இழக்கக் கூடாது. கட்சிக் காரரை இழந்தாலும் நீதியை இழக்கக் கூடாது. நீதி கிடைக்கா விட்டாலும் நேர்மை, மனசாட்சியை இழக்கக் கூடாது. புதிதாகத் திறக்கப்பட்ட நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்பதை பிற்காலத்திலும் பேசும் வகையில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் செயல்பட வேண்டும். இங்கு நடைபெறும் முதல் வழக்கை அடிக்கடி ஒத்திவைக்காமல் தாமதமின்றி சிறந்த தீர்ப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
முன்னதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், பி.டி.ஆதிகேசவலு, பி.வடமலை, சி.குமரப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட நீதிபதி குரு மூர்த்தி வரவேற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜானகிராமன் செங்கோல் வழங்கினார். பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் ரகுநாதன், வழக்கறிஞர் சங்கச் செயலாளர் சித்திரைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமைக் குற்றவியல் நீதிபதி சுந்தர ராஜ் நன்றி கூறினார்.