சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் பெற்று தருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் பணிக்காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சார்ந்த தணிக்கை தடைகளுக்காக ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கூடாது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றிஆசிரியர்களின் பணிக்காலத்துக்கு தணிக்கை அறிக்கை பெற்றபின்னர், தனிபட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை ஏதும் இல்லையெனில் உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை பெற்று வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தாமதமின்றி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.