பழநி நகராட்சி சார்பில் குடிநீர் கொண்டு செல்வதற்காக கிரி வீதியில் வைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் ( அடுத்த படம் ) பழநி நகராட்சி கோடை கால நீர்த்தேக்கம். 
தமிழகம்

பழநி நகராட்சி சார்பில் ரூ.18.58 கோடியில் கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி நகராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.18.58 கோடி செலவில் கூடுதலாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பழநி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் சாலையில் உள்ள கோடை கால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது. இங்கிருந்து 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தம் செய்து தினமும் நகராட்சியின் 33 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 9,483 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு தட்டுப்பாடின்றி சுத்தமான குடிநீர் வழங்க புதிய திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மாநில நிதி ஆணைய ஊக்கத் தொகை திட்டத்தில் கோடை கால நீர்த்தேக்கம் அருகே ரூ.8.78 கோடி செலவில் புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து பழநி நகர் பகுதிக்கு குடிநீரைச் சுத்திகரிப்பு செய்து கொண்டு வருவதற்காக ரூ.9.8 கோடியில் 8 கி.மீ. தூரத்துக்கு ராட்சதக் குழாய்கள் தரையில் பதிக்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.18.58 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் கூடுதலாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. அதாவது, ஒருவருக்கு 90 லிட்டர் முதல் 110 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட உள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT