கும்பகோணம் அருகே தனியார் பள்ளியில் இரும்பு ஸ்கேலால் ஆசிரியை தாக்கியதில் 2-ம் வகுப்பு மாணவனின் பார்வை பறிபோனது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் மினர்வா என்ற தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது.
பிரி கேஜி முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 7-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனர்.
இப்பள்ளியின் 2-ம் வகுப்பில் ஆசிரியை ஜோதி என்பவர் கடந்த 20-ம் தேதி (புதன்கிழமை) மதியம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனராம்.
ஆத்திரமுற்ற ஜோதி, கையில் இருந்த ஒரு அடி நீள இரும்பு ஸ்கேலை வகுப்பறையில் வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் திருப்புறம்பியத்தை அடுத்துள்ள குடிதாங்கியைச் சேர்ந்த செழியன் என்பவரின் மகன் இளமாறன்(7) என்ற மாணவரின் இடது கண்ணில் பட்டதில் கண்ணின் கருவிழி பலத்த சேதமடைந்தது.
தகவலறிந்து வந்த செழியன், காயமுற்ற தனது மகனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு இளமாறனின் இடது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஏராளமான பெற்றோர் பள்ளி முன் திரண்டு முற்றுகையிட்டதால் பள்ளிக்கு வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் விடுமுறை விடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாணவர் இளமாறனின் பெரியப்பா குமார் வெள்ளிக்கிழமை சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.