பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பறவை காய்ச்சல் தடுப்பு பணிக்காக 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள்: ஈரோடு அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பழனிவேல் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 65 முட்டைக் கோழி பண்ணைகளில், 32.38 லட்சம் முட்டைக் கோழிகள், 568 கறிக்கோழி பண்ணைகளில், 27.57 லட்சம் கறிக் கோழிகள், 56 நாட்டுக் கோழி பண்ணைகளில், 2.31 லட்சம் நாட்டுக்கோழிகள் உள்ளன.

பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், அனைத்து கோழி பண்ணைகள், புறக்கடை கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கிறோம். கோழிப் பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி உள்ளோம்.கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழித் தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை வாங்கக் கூடாது.

கடந்த ஒரு மாதத்துக்குள் கேரளாவில் குஞ்சு பொரிப்பதற்கான முட்டைகள், வாத்துகள், கோழிகள் வாங்கி இருந்தால், அவற்றை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பண்ணையில் இறந்த கோழிகளை, கோழி இறப்பு குழியில் கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும். கோழிப் பண்ணையின் உள்ளே, மருந்து தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அசாதாரண இறப்பு ஏற்பட்டால், ஈரோடு கோழி நோய் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

பண்ணையாளர்கள் வேறு பண்ணைகள், பறவைகள் சரணாலயம் செல்வதை யும், பண்ணைக்குள் பிற பார்வையாளர்களை அனுமதிப் பதையும் தவிர்க்க வேண்டும். பிற மாநிலத்துக்கு முட்டைகளை எடுத்து செல்ல, காகித அட்டைப் பெட்டிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய காகித அட்டைகளை திரும்ப எடுத்து வரக்கூடாது.

மேலும், பறவை காய்ச்சல் நோயானது, கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள், வனப் பறவைகளை தாக்கும் தன்மை கொண்டதாகும். எனவே, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தினமும் பார்வையிட்டு, பறவைகளின் நோய் அறிகுறியை கண்காணிக்கிறோம். நோய் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து, தயார் நிலையில் வைத்துள்ளோம், என்றார்.

SCROLL FOR NEXT