நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில், பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வனத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசியதாவது: கேரளா மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப் பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும், பண்ணையின் நுழைவு வாயிலில் சிறிய தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைக்க வேண்டும்.
பண்ணைக்குள் வருபவர்களும், வாகனங்களும் அந்த கரைசலில் கால்களை நனைத்துச் செல்ல வேண்டும். மேலும், பண்ணை வளாகம் முழுவதும் உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிக்காக, நாமக்கல் மாவட்டத்தில், கால் நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 47 அதி விரைவுப் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, கோழிப் பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு கோழிப் பண்ணையாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும். வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில், அசாதாரணமாக கோழிகள் உயிரிழப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கோழி மற்றும் கோழியினப் பொருட்கள் போக்கு வரத்தினை அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். இந்நோய் குறித்து நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள் மொழி, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வ ராஜு, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நாராயணன், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல தலைவர் சிங்க ராஜ், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.