மாநகர பஸ்களில் ஒரு சில நடத்துநர்கள், பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது அந்தப் பணிகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக புதிய பாஸ் கொடுக்கும் வரை பழைய பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அவர்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது என்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து பணிமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஒரு சில வழித்தடங்களில் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘பள்ளி மாணவர்களிடம் பஸ் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சில வழித்தடங்களில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்புகூட என் மகன் மாநகர பஸ்சில் (தடம் எண் எம்-70எல்) இரவு 8 மணிக்கு வந்தபோது, நடத்துநர் கட்டணம் வசூலித்துள்ளார். இதுபற்றி கேட்டபோது பள்ளிகள் தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்பும், பள்ளி முடிந்து 2 மணி நேரம் பின்பும்தான் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என நடந்துநர் வாதிட்டார்’’ என்றார்.
இதுதொடர்பாக போக்கு வரத்துக் கழக அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘மாணவர்களிடம் பஸ் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிகள் திறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங் களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.
குறிப்பாக, பள்ளி மாணவர்கள் சீருடை போட்டு வந்தாலேயே அவர்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது என தெரிவித்துள்ளோம். இதை மீறி கட்டணம் வசூலித்தது தொடர்பான புகார் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.