தமிழகம்

சேலம் - சென்னைக்கு பிற்பகலில் இயக்கப்பட்டு வந்த விமானம் ரத்து செய்யப்பட்டு மாலைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சேலத்திலிருந்து சென்னைக்கு பிற்பகலில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு மாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை - சேலம் - சென்னை இடையே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 11.40 மணிக்கு சேலம் சென்றடையும்.

அந்த விமானம் மீண்டும்பகல் 12.40 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு, பகல் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சென்னை - சேலம் - சென்னை இடையே விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சேலத்திலிருந்து பகல் 12.40 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானத்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6 மணிக்கு சென்னை வருகிறது.

சென்னை - சேலம் - சென்னை இடையே கூடுதல் விமான சேவையை பயணிகள் கேட்டிருந்த நிலையில், சேலம் - சென்னை இடையே பிற்பகலில் இயக்கப்பட்டு வந்த விமான சேவையை ரத்து செய்துவிட்டு, அந்த சேவையை மாலைக்கு மாற்றியிருப்பது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், ``சேலம் - சென்னைஇடையே பிற்பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். அதோடு கூடுதல் விமானசேவையாக, சென்னை- சேலம்- சென்னை இடையே பிற்பகல் மற்றும் மாலையிலும் விமான சேவையை இயக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு, சென்னை - சேலம் - சென்னை இடையிலான விமான சேவை காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் இயக்கப்பட்டு வந்தது. அதேபோல், மீண்டும் இயக்கப்பட வேண்டும்'' என்றனர்.

SCROLL FOR NEXT