தமிழகம்

சென்னையில் 3 மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: போலீஸார், கட்சி முகவர்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காவல் துறையினரும் அரசியல் கட்சி முகவர்களும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம்தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் (ஸ்டிராங் ரூம்) வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வடசென்னை தொகுதிக்கான மின்னணு இயந்திரங்கள், ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதிக்கான இயந்திரங்கள், லயோலாகல்லூரியிலும், தென் சென்னைக்கான இயந்திரங்கள், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மத்திய ஆயுத காவல் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை பெருநகர ஆயுதப்படை, சென்னை பெருநகர காவல் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளை சேர்ந்த போலீஸார் 1,095 பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 188 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, அரசியல் கட்சிகளின் முகவர்களும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி வரை முக்கிய கட்சிகளின் முகவர்கள் 24மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அரசியல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT