பொன்னேரி: பொன்னேரி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்ட சட்டமேதை அம்பேத்கர் சிலையை வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி என்று அழைக்கப்படும் சின்னம்பேடு கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட மேதை அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்காக பொதுமக்கள் சார்பில் பீடம் மற்றும் சுமார் 4 அடி உயரத்தில் சிமென்டால் ஆன மார்பளவு அம்பேத்கர் சிலை உருவாக்கப்பட்டது.
வட்டாட்சியர் விசாரணைள்: ஆனால், வெண்கலச் சிலைதான் அமைக்க வேண்டும் என, வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அந்த சிலை நிறுவப்படாமல், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், சின்னம்பேடு கிராமத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் சிமென்ட்டால் ஆன அம்பேத்கர் சிலையை சிலர் நிறுவியுள்ளனர்.
நீண்ட காலமாக இருந்த பீடத்தில் திடீரென அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது குறித்து மக்கள் அளித்த தகவலின் பெயரில், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஆரணி போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அனுமதி பெற அறிவுரை: தொடர்ந்து, வருவாய்த் துறை அதிகாரிகள், உரிய அனுமதியின்றி நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றி, அதனை அங்கன்வாடி மையத்தில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும், உரிய அனுமதி பெற்று வெண்கலத்தால் ஆன அம்பேத்கர் சிலையை வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வருவாய்த் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.