ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தென்காசி - கொல்லம் அகல ரயில் பாதையில் லாரிகளை கொண்டு செல்லும் ரோ-ரோ சரக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் - கேரளா இடையே இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் தென்காசி, நாகர்கோவில், தேனி, கோயம்புத்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சிமென்ட், காய்கறி, மளிகை, விவசாயப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கனிம வளங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த சரக்கு வாகனங்கள் அனைத்தும் செங்கோட்டை, புளியரை, தென்மலை, புனலூர் மலைப் பாதை வழியாக கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது. அதிக வாகனப் போக்குவரத்து காரணமாக குறுகலான மலைப்பாதையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு புளியரை சோதனைச் சாவடியில் பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதியில் பெரிய சரக்கு கப்பல்களைக் கையாளும் துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது செயல்பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து அதிகரிக்கும்.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்காசி - கொல்லம் அகல ரயில் பாதையில் லாரிகளை கொண்டு செல்லும் ரோ - ரோ சரக்கு ரயில்களை ( சரக்கு லாரிகளை ரயிலில் ஏற்றிச்செல்லும் சேவை ) இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் தென்காசி - கொல்லம் மலை சாலையில் நெரிசல், பயணச் செலவு, பயண நேரம் குறையும்.
இது குறித்து ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கத் தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு-கேரள மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய சாலை மற்றும் ரயில் வழித்தடமாக செங்கோட்டை - புனலூர் மலைவழிப் பாதை உள்ளது. இரு மாநில சரக்கு போக்கு வரத்து மற்றும் துறைமுகங்களை இணைக்கும் திட்டங்களால், இந்த மலை வழிப்பாதை கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
தென்காசி புனலூர் மலை ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரயில்வே மேலாண்மை மற்றும் வடிவமைப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில் பாதையில் ரோ-ரோ வகை சரக்கு போக்கு வரத்தை தொடங்க பூர்வாங்க ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.