உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 20 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவி நாசி மற்றும் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 70.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மலைப் பகுதியை விட, சமவெளிப் பகுதிகளில் அதிக அளவில் வாக்குப் பதிவாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73.7 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்முறை 2.8 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பவானிசாகர் சட்டப் பேரவைத் தொகுதியில் 76.08, குறைந்த பட்சமாக குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 66.61 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
உதகையில் 67.25, கூடலூரில் 67.05, மேட்டுப்பாளையத்தில் 72.28, அவிநாசியில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம், பூத் சிலிப் விநியோகத்தில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் தான் நீலகிரி மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: நீலகிரி தொகுதியில் பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்தேன். பல இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து விடு பட்டுள்ளன. பல்வேறு வாக்காளர்களின் பெயர்களை வேண்டுமென்றே திமுக அரசு நீக்கியுள்ளது. இது குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும்.
உதகை ஹோபர்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கடைசி நேரத்தில் வந்த ஒரு சிலருக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் தோல்வி பயத்தில் திட்டமிட்டு, திமுக அரசு வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்துள்ளது. வாக்காளர்கள் எவ்வளவு பேர் வாக்களிக்கவில்லை என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.
அவிநாசி அருகே வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு மூதாட்டி, 3-ம் எண்ணில் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் கூறியுள்ளார். ஆனால் ஒன்றாம் எண்ணில் தேர்தல் அலுவலர் வாக்களிக்க வைத்துள்ளார். இதுகுறித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கூறினார்.