சென்னை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
தரம் குறைந்த, கெட்டுப்போன பிரசாதங்களை இந்த கோயிலில் விற்பனை செய்வதாக பக்தர்கள்புகார் அளித்தனர். அதையடுத்து இந்த பிரசாத விற்பனை நிலையத்தை ஆய்வு செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் பிரசாதங்களின் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்ததில், அவை தரம்குறைந்தவை என்றும், கெட்டுப்போனவை என்பதும் உறுதியானது.
ஒப்பந்தம் ரத்து: அதையடுத்து ஒப்பந்ததாரரான சீனிவாசனுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவர் இனிமேல் இதுபோல நடக்காது என விளக்கமளித்தார். ஆனால் அதையேற்க மறுத்த அறநிலையத் துறை அதிகாரிகள் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து சீனிவாசன் தாக்கல் செய்திருந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பக்தர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தரமற்ற மற்றும் கெட்டுப்போன பிரசாதங்களை மனுதாரர் பக்தர்களுக்கு விற்பனை செய்திருப்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந்துள்ளது.
அறநிலைய துறைக்கு அதிகாரம்: அதன்பேரிலேயே மனுதார ருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் எந்த தவறும் இல்லை. கோயில்களில் உள்ள பிரசாத விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து முறைப் படுத்தவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.